மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதி ஊர்மெச்சிகுளம், விநாயகர்கோவில் தெருவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் அவரது மனைவி ஓய்வுபெற்ற செவிலியர் பாப்பா ஆகியோர், தங்களது உயிரையும் உடைமைகளையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
இது பற்றி தம்பதியினர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், தங்களது மகன் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்துக்கும் அடிமையாகி, தினந்தோறும் தங்களை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், தினமும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதுடன் பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மது போதையில் தாய், தந்தையர் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொள்வதும் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை தொடர்ந்து செய்து வருவதால், தங்கள் வாழ்க்கை தினமும் அச்சத்துடனும் வேதனையுடனும் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது வரை மகனை 4 முறை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பலமுறை காவல் நிலையங்களில் புகாரளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் மனுவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். இதனால், வயதான தங்களது உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் நிலவுவதாக கூறிய அவர்கள், தங்களை மகனிடமிருந்து காப்பாற்றி, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் கருணை மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் சம்பந்தமாக தம்பதியினருக்கு உதவி வரும் “சமூகசேவகி” போதிலெட்சுமி, மூத்த குடிமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
