வாணியம்பாடியில் நீர்வளத்துறை சார்பில் கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்து பேசினார்.

வாணியம்பாடி, மார்ச்.9 – திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை துவங்கி வைத்தல் மற்றும் வேலூர் பாராளுமன்ற நிதி திட்டத்தில் 85 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வார சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்
எ.வ.வேலு தலைமை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்து துவக்க உரையாற்றினார். நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ரமேஷ் அனைவரையும் வரவேற்று திட்ட விளக்கவுரையாற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொது செய்லாளருமான துரைமுருகன் கலந்து கொண்டு கல்லாறு / சின்னப்பாலாற்றில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை குத்துவிளக்கு ஏற்றியும், பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகராட்சி பகுதி ஜின்னா சாலை மற்றும் பெருமாள்பேட்டை பகுதிகளில் பயணிகள் நிழற்கூடம், நியூடவுன் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடம், பொது விநியோகம் கடை, இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பிடங்கள் என ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான முடிவற்ற பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
1959ல் நான் இசுலாமிய கல்லூரியில் பி.யு.சி படித்தேன். முதல் முதலாக என்னை இந்த கல்லூரியில் பேச்சாளர் ஆக்கியது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய தேசிய லீக் கட்சி தலைவருமான எம்.ஏ.அப்துல் லதீப் தான். எனவே வாணியம்பாடி பொறுத்த வரையில் எனக்கு ஒரு பிறந்த பூமி மாதிரி. எனக்கு அ.ஆ.சொல்லி கொடுத்த இடம், என்னை பேச்சாளராக உருவாக்கிய இடம் வாணியம்பாடி இசுலாமிய கல்லூரி தான். அந்த கல்லூரி மண்ணுக்கு நான் என்றைக்கும் சொந்தக்காரன். அவர்களுக்கு வேண்டியது செய்ய கூடியவன்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் ஒரு அணை கட்டியுள்ளது. அந்த அணையில் மழைக்காலங்களில் பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. சாத்தனூர் அணை முழுகின்ற அளவுக்கு தண்ணீர் வந்து விடும். அவ்வளவு பெரிய வெள்ளம் வரும் போது அந்த தண்ணீரை நமக்கு சற்று திருப்பி விடலாமே. அந்த தண்ணீரை திருப்பினால் காக்கங்கிரை வழியாக பாலாற்றில் விட்டால் பாலாற்றில் தண்ணீர் போகும். அப்போ ஆற்றில் ஈரம் அதிகமாக இருக்கும். நாங்கள் பாலாற்றில் குறுக்கு ஆங்காங்கே செக் டேம் கட்டுகிறோம். நான் இருக்கின்ற போதே தென்பெண்ணை பாலாறு இணைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்று பெயர் வாங்க வேண்டும். சென்னையில் உள்ள கூவத்தூர் ஆற்று எத்தனை முறை சுத்தம் செய்தாலும் மக்கள் குப்பைகளை அங்கே தான் கொட்டி செல்லுகின்றனர். இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளில் குப்பை கொட்டுவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
சிறு பிள்ளையாக இருந்த ஸ்டாலின் இன்றைக்கு தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாய் என் தலைக்கு மேல் வளர்ந்து எனக்கு தலைவராக இருக்கிறார். எப்படியும் கலைஞரைப் போல் இவர் இருப்பாரா என்று நினைத்தேன். ஆனால் கலைஞர் அவர்களுக்கும் இவருக்கு வித்தியாசம் என்னவென்றால் இவர் காரியத்தை சாதிப்பதில் கலைஞரை மிஞ்சுவார் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. இப்படிபட்ட ஒரு பரிமாணத்தை ஸ்டாலின் செய்வாரு என்று நான் எதிர் பார்க்கவில்லை. ஆக எனக்கு நீண்ட நெடுங்காலமாக ஒரு பயம் இருந்தது. இந்த திராவிட இயக்கம் மொழிக்காக, இனத்திற்காக தோன்றிய இயக்கம். ஒரு காலத்தில் கரைந்துவிடுமோ என பயந்தேன். இப்போது அது இல்லை. அதனை பாதுகாக்கும் அரணாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் உள்ளனர்.
முன்னதாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்:-
கல்லாற்றை சுத்தப்படுத்தும் மூலமாக ஒரு ஆரோக்கியமான ஒரு சமுதாயம் எதிர் காலத்தில் வளர்வதற்கு ஒரு அடித்தளமாக அமையும். நிலத்தடி நீர் உருவாவதற்கு அடித்தளமாக இருக்கும். சட்டமன்றத்தில் வாணியம்பாடி தொகுதி பற்றி, உங்களுடைய கோரிக்கை பற்றி கேட்பதற்கு அங்கே குரல் இல்லாமல் இருக்கின்றது. அதனை எண்ணி பார்த்து வருங்காலத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு ஒற்ற துணையாக இருந்து வாணியம்பாடியில் இருந்து சார்பாக ஒரு குரல் எழுப்புவதற்கு அத்தனை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் என்.ஆர்.சூர்யகுமார், வாணியம்பாடி நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன், நகர கழக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, அலங்காயம் பேரூர் கழக செயலாளர் ஸ்ரீதர், உதயேந்திரம் பேரூர் கழக செயலாளர் ஆ.செல்வராஜ், தொழிலதிபர்கள் ஆர்.ஆர்.வாசு, புருஷோத்தமன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எஸ்.டி நிசார் அஹமத், எஸ்.எஸ்.பி.பாரூக் அகமத், மதிமுக நகர செயலாளர் ஏ .நாசீர் கான், முத்தமிழ் மன்ற செயலாளர் நா.பிரகாசம், நகரமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெ.சொ.பிரபாகர் நன்றி கூறினார்.
நிருபர்
அப்சர் மர்வான்
