இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது 88வது நினைவு தினம் குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசியதாவது.
நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் சர் பிரடரிக் நிக்கல்சன் இங்கிலாந்தில் 1846ம் ஆண்டு செப்டம்பர் 20ல் பிறந்த இவர் இந்திய சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட பல்வேறு இடங்களில் பணியாற்றினார். நமது நாட்டில் முதன் முதலில் கூட்டுறவு இயக்கம் துவங்க முன்னோடியாக இருந்தார். 1872ல் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. அதில் 10 மில்லியன் மக்கள் இறந்தனர். அப்போது பஞ்சத்தில் வாடும் மக்களின் பாதிப்பை தவிர்க்க சென்னை மாகாண கவர்னர் வெண்லாக் பிரபு திருநெல்வேலி கலெக்டராக இருந்த விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பிரடரிக் நிக்கல்சனை தேர்வு செய்தார். பல வெளி நாடுகள் சென்ற நிக்கல்கன் இரு அறிக்கைகள் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் 1904ம் ஆண்டு நம் நாட்டில் முதல் கூட்டுறவு கடன் சங்கம் திரூரில் (தற்போது திருவள்ளூர்) துவங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு சங்கங்கள் துவங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஓய்வு பெற்ற பிறகு குன்னூரில் வாழ்ந்த இவர் நகர வங்கியில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1936ம் ஆண்டு மறைந்த இவரின் நினைவாக குன்னூரில் உள்ள கல்லறையில் 88 வது ஆண்டு நினைவு தின அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைவரும் இவரை மறவாமல் இருக்க வேண்டும். மேலும் இவரது சீரிய பணியினை கருத்தில் கொண்டு அரசனது அவரது பிறந்த நாள் தினத்தினை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குவிக் அவர்களை அப்பகுதி மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்களோ அது போலவே சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களையும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அறிந்து அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களை நினைவு கூற வேண்டும். நிக்கல்சன் அவர்களது நினைவாக அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் இவரின் புகைப்படங்கள் வைக்கப்படும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் திரு. பெ. ரவிக்குமார் திருமதி. மேனகா, பண்டகசாலை மேலாளர் திரு. ரவி கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
