Headlines

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த விநியோக முறை சீர்குலைந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அன்றாடத் தேவைக்குக் கூடத் தண்ணீர் இன்றித் தவிக்கின்றனர். குடிநீருக்காகப் பக்கத்துத் தெருக்களுக்கு அலைய வேண்டிய நிலையும், அதிக விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்கும் சூழலும் உருவாகியுள்ளது. வசதியற்ற ஏழை எளிய மக்கள், ரூ.1000 கொடுத்து டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலாளர் திரு. நடராஜன் அவர்களிடம் முறையிட்டபோது, சின்டெக்ஸ் தொட்டி (Sintex Tank) அமைத்துத் தருவதாக கடந்த ஆறு மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்களின் வேதனையைப் புரிந்து கொண்டு, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. I.P. செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் திரு. S. சரவணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு, இப்பகுதிக்குச் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *