நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக 15.10.2025 நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆருகுச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் அமைந்துள்ள ஒசஹட்டி கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற உதமண்டலம் சரக துணைப் பதிவாளர் திரு. சி. அய்யனார் அவர்கள் தனது தலைமையுரையில், இந்த உறுப்பினர் கல்வித் திட்டம் வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களின் கிராமங்கள் தோறும் சென்று அவர்களது தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்து அதனை துறை அலுவலர்கள் வாயிலாக நிவர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கம் எனவும், கூட்டுறவு சங்கத்தின் இன்றியமையாத சேவைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
திட்டவிளக்கவுரையாற்றிய நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. ரா. கௌரிசங்கர் உறுப்பினர் கல்வித்திட்டத்திற்கான நோக்கங்கள் மற்றும் பயன்கள் குறித்தும் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும் எடுத்துரைத்தார்.
கைகாட்டி தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை மேலாண்மை இயக்குநர் திரு. திருமால்ராஜேந்திரன் அவர்கள் சேவை நோக்குடைய கூட்டுறவு அமைப்பிற்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேல்ஒசஹட்டி தலைவர் திரு. ஆல்துரை கூட்டுறவு இயக்கம் விவசாய மக்களின் வாழ்வில் எவ்வாறு உறுதுணையாக இருக்கிறது என எடுத்துரைத்தார்.
முன்னதாக சங்கத்தின் செயலாளர் திரு. சரவணன் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சியின் இறுதியாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் உதவியாளர் திரு. நவீன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
