திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள தட்சணமாற நாடார் சங்கக் கல்லூரியில் 1984–ஆம் ஆண்டு B.COM படித்து முடித்த, முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று [டிச.18] நேரில் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி, கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், முன்னாள் மாணவர்கள் மொத்தம் 35 பேர், குடும்பத்துடன் வந்திருந்தனர் அவர்கள், “தங்களுடன் படித்த மாணவ நண்பர்களை, 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கின்றோமே!” என்று கூறி, மலரும் நினைவுகளுடன் கட்டித்தழுவி, ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை, பரிமாறிக் கொண்டனர். வந்திருந்த பழைய மாணவர்களுள் சிலர் கல்லூரி பேராசிரியர்களாகவும், வேறு சிலர் வங்கி மேலாளர்களாகவும், இன்னும் சிலர் காவல்துறை ஆய்வாளர்களாகவும், மற்றும் சிலர் தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டுத்துறை தலைவர்களாகவும் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ளனர்.
மீதியுள்ள சிலர் வழக்கறிஞர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும், தொழில் அதிபர்களாகவும் மிளிருகின்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரமு அம்மாள், மீனாம்பிகா ஆகியோர், “இறைவணக்கம்” பாடினர். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் மேலாளர் ஏ.லிவின் தேவகுமார், அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் பேராசிரியர்கள் கே. வைரமணி, பொன்முருகன், டி.இசக்கி, எம்.பி. எடிசன்,எம். பால் துரை ஆகியோர், “சிறப்பு அழைப்பாளர்களாக” கலந்து கொண்டு, பேசினர். “நினைவு பரிசு”கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர்கள் எஸ். ரகுபதி ராகவன், எஸ். சவுந்திர பாண்டி, ஏ.முருகன், என்.பாண்டி, கே. லிங்கசெல்வன், பி. லட்சுமணன் உள்பட பலர், வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியை, கவுரி தொகுத்து வழங்கினர்.
நிகழ்ச்சியின் நிறைவில், எஸ். முருகேஷ் விஜயகுமார், அனைவருக்கும் நன்றி கூறினார். கல்லூரி தாளாளர் வி.பி. ராமநாதன், இயக்குனர் எஸ்.கே.டி.பி.காமராஜ், முதல்வர் ராஜன், பேராசிரியர் பாலமுருகன் மற்றும் மாணவ- மாணவிகள் ஆகியோர், முன்னாள் மாணவர்களை, அன்புடன் வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, “பெருந்தலைவர்” காமராஜர், சங்க முன்னாள் தலைவர் ராஜா பலவேசமுத்து நாடார் ஆகியோரின் திருவுவச்சிலைகளுக்கு, முன்னாள் மாணவர்கள் “மலர் மாலை” அணிவித்தும், “மலர்” தூவியும், “மரியாதை” செலுத்தினர். முன்னாள் மாணவர்கள், தாங்கள் பயின்ற வகுப்பறைகள், விடுதியில் தாங்கள் தங்கியிருந்த அறைகள் மற்றும் கல்லூரி வளாகம் ஆகியவற்றை, சுற்றி- சுற்றி வந்து, பார்த்து- பார்த்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.