மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் வெளியிட்ட தீவிர கண்டன அறிக்கை
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் தலைமையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தப் படியில், சவேரியார் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிக்குளம் வரை நடைபாதை மற்றும் வண்ணக் கற்கள் பதிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை ஒப்பந்ததாரர் தியாகராஜன் மேற்கொண்டு வருகிறார். ஆனால் இங்கே கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
பாரபட்சம் – சலுகை – லஞ்சம்?
அந்தப் பகுதியில் பல வணிக நிறுவனங்கள் இருந்தும்,
சில பெரிய வணிக நிறுவனங்களின் முன்பு நடைபாதை உடைக்காமல் விட்டுவிட்டு, மற்ற இடங்களில் மட்டும் பாதையை உடைத்து பணிகள் நடைபெறுகின்றன என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பெண்கள் சிலர் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ஒப்பந்ததாரர் தியாகராஜன் தரக்குறைவாகப் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும், “சிறு வியாபாரிகளுக்கு ஒரு விதி – பெரு வியாபாரிகளுக்கு வேறு விதியா?” என்ற கேள்வியும் தீவிரமாக முன்வைக்கப்படுகிறது.
சில பெரிய நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுவிட்டு, அவர்களின் கடை முன்புறத்தை உடைக்காமல்
சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பரவியுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் கடும் கண்டனம்: கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் தெரிவித்துள்ளார்:
“நகர்மன்ற பணிகளில் பாரபட்சம், சலுகை, பிரிவினை என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுப்பணியில் அனைவருக்கும் ஒரே விதிமுறையே அமலாக வேண்டும்.
உடைக்காமல் விடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் முன்பும் உடனடியாகப் பணிகளை தொடங்க வேண்டும்.
இல்லையெனில் மக்கள் நலன் கருதி கட்சி சார்பில் கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்.”
உடனடி கோரிக்கைகள்:
உடைக்காமல் விடப்பட்டுள்ள நிறுவன முன்புறங்களை உடனடியாக சமமாக்க வேண்டும்
பணிகளில் பாரபட்சத்தைத் தவிர்க்க மாநகராட்சி நேரடி கண்காணிப்பு அவசியம்
ஒப்பந்ததாரர் தியாகராஜனின் பேச்சு, நடத்தை குறித்த புகார்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
