திருநெல்வேலி,ஜன.7:-
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, “மின்சார சிக்கன வார விழா” ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல், டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரையிலும் கொண்டப்படுகிறது. அந்த காலகட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில், மழையும்- வெள்ளமுமாக இருந்ததால், இந்த வாரவிழாவை நடத்த இயலவில்லை. எனவே, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தின், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் பொது மக்களிடையே, மின் பயன்பாட்டில் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில், இம்மாவட்டம் சங்கர் நகர், தாழையூத்து பேருந்து நிலையம முதல், தாழையூத்து துணை மின் நிலையம் வரை, “மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. இந்த பேரணியை, திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேசுவரி அம்மையார், “கொடி” அசைத்து துவக்கி வைத்தார். திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட செயற் பொறியாளர்கள், உதவி செயற் பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக, இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியினர், மின் சிக்கனம் மற்றும் மரபுசார மின் பயன்பாடு குறித்த பதாகைகளை, தங்களுடைய கரங்களில் ஏந்தி சென்றனர்.

அத்துடன், விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களையும், வழி நெடுகிலும் விநியோகித்தபடி சென்றனர். பேரணியில், சங்கர்நகர் தாழையூத்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், மற்றும் ஊர்மக்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி நிறைவு பெற்றவுடன், தாழையூத்து துணை மின் நிலையம் அருகில், மின்சார சிக்கனம் மற்றும் மரபு சார மின் பயன்பாடுகள் குறித்த, “சிறப்பு கருத்தரங்கம்” நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் தலைமையில், கிராமப்புற கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.