Headlines

“தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு ‘மதச்சார்பின்மை’ பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!”- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

"தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, முதலமைச்ருக்கு 'மதச்சார்பின்மை' பற்றி பேசுவதற்கு, துளியேனும் தகுதியில்லை!"- திருநெல்வேலி பேட்டியில், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், கடுந்தாக்கு!

திருநெல்வேலி,டிச.21:-


திருநெல்வேலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு, பதில் அளிக்கும் வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று (டிசம்பர். 21) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, திட்டவட்டமாக மறுத்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “மேடைகளில் மதச்சார்பின்மை குறித்தும், மகாத்மா காந்தி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.

ஆனால், அவர் உண்மையில் மதச்சார்பின்மையை கடை பிடிக்கிறாரா? என்பதை நான் ஒரு குற்றச்சாட்டாகவே முன் வைக்கிறேன். முதல்வர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாக்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறார்.

ஆனால், இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கு, ஒரு வாழ்த்து சொல்லக்கூட, அவருக்கு மனமில்லை. அனைத்து மதத்தினரையும், சமமாகப் பாவிக்காத ஒருவருக்கு, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பயன்படுத்திட, தார்மீக ரீதியாகக்கூட உரிமை கிடையாது.

எனவே, அந்த வார்த்தை முதல்வருக்கு, சற்றும் பொருத்தமானதாக இருக்காது! என்பதுதான், என்னுடைய திடமான எண்ணம்” என்று காட்டமாக தெரிவித்தார்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தொடர்பாக, முதல்வர் முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம்!” என்று வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், திமுக அரசு வழக்கம் போலவே, இதில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியது. இத்திட்டத்தை சீர்குலைப்பதே திமுக அரசு தான்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஏழை-எளிய மக்களின் நலன் கருதி, இத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி உறுதி செய்துள்ளார்.

குறிப்பாக, அறுவடை மற்றும் நாற்று நடுதல் போன்ற முக்கிய விவசாய காலங்களில், ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, விவசாய பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இத்திட்டத்தில் ஆக்கப்பூர்வமான, நல்ல சீர்திருத்தங்களை மோடி அரசு மேற்கொண்டுள்ளது.

விவசாயிகளின் நலன் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஆகிய இரண்டையும் சமமாக பாதுகாக்கும் வகையில், பிரதமர் இத்திட்டத்தை வழிநடத்தி வருகிறார்” என்று கூறினார்.

மாநில அரசின் தோல்விகளை மறைக்கவே, மத்திய அரசு மீது முதல்வர் பழி போடுவதாகவும், பாஜக அரசு எப்போதும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அரசு என்றும், நயினார் நாகேந்திரன் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வரின் திருநெல்வேலி வருகை மற்றும் முதல்வரின் அரசியல் விமர்சனங்களுக்கு, பா.ஜ.க. தரப்பிலிருந்து தரப்பட்டுள்ள இந்த பதில், தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *