சென்னை:
கன்னியாகுமரி மக்களுக்கான முக்கிய தேவைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த்.
சந்திப்பில், மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார். அதில் முக்கியமாக:
நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரங்களில் அதிகரித்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க அவசர நிதி ஒதுக்கீடு செய்யுதல்.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள், பாலங்கள் மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்துதல்.
மீன்வளத் துறை சார்ந்த மீனவர்கள் நலனுக்காக கூடுதல் உதவித் தொகை மற்றும் புதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்.
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உலகத் தரத்திலான அடிப்படை வசதிகளை அமைத்து, சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்களை விரைவுபடுத்துதல்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, நவீன சிகிச்சை உபகரணங்கள் வழங்குதல்.
முதலமைச்சர் ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்வைத்த கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக் கொண்டு, அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த சந்திப்பு குறித்து வெளியான தகவலில், “கன்னியாகுமரி மக்களின் தேவைகளை மாநில அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழக அரசு, மாவட்ட வளர்ச்சிக்கு விரைவில் சிறப்பான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறேன்” என விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட மக்களுக்கான தேவைகளை அரசிடம் வலியுறுத்திய இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.
