கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் இன்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
கடலில் இறங்கும் முன் தங்களின் படகுகளை அர்ச்சித்து, கடல் அன்னைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். கடல் பாதுகாப்பிற்கான மரபு வழி பிரார்த்தனையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமாகும் மீனவர்களை மீட்க தனிச்சிறப்பான ஹெலிகாப்டர் மீட்பு தளம், கடல் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், புயல் எச்சரிக்கை மற்றும் பேரிடர் கால தகவல்களை துல்லியமாக அறிய அதிநவீன வழிகாட்டி கருவிகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்களின் உயிர் பாதுகாப்பு, தொழில் நிலைத்தன்மை, மீட்பு வசதிகளின் மேம்பாடு ஆகியவை அவசர முன்னுரிமையாக பார்க்கப்பட வேண்டும் என உள்ளூர் மீனவர் சங்கங்கள் தெரிவித்தன.
தமிழக விடியல் குமரி மாவட்ட கோஸ்டல் நிருபர்: அபிஷா.
