9 செப்டம்பர் 2025
குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செந்தூரன் நகர் பகுதியில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலையில் காங்கிரீட் செப்பனிடும் பணிக்காக கற்கள் வைத்து சாலை மறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்விக் கூடம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள அச்சாலை, பொதுமக்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் முக்கியப் பாதையாகக் கருதப்படுகிறது.
ஆனால் கற்கள் வைத்து வழி மறைத்ததால், பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள் செல்லும் வாகனங்கள் கூட இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், காவல்துறையின் அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். “இரவு நேரங்களில் செய்ய வேண்டிய பணிகளை, பொதுமக்கள் அதிகமாக சாலை பயன்படுத்தும் நேரத்தில் மேற்கொண்டதோடு, கற்கள் வைத்து அத்தியாவசிய வாகனங்கள் கூட வர முடியாதபடி இடையூறு செய்துள்ளனர்” என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக கற்களை அகற்றி, பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை, பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தது.
செய்தி : குமரி மாவட்ட கேமராமேன் ஜெனீர்
