அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி , பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் , மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் கோயில் தேவஸ்தான நிர்வாக இணை ஆணையர் , செயல் அலுவலர் மாரிமுத்து செல்வராஜ் , பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்செயன் , பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் , உதவி காவல் ஆய்வாளர்கள் , சார்பு ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை பார்த்து மனம் உருகி முருகப்பெருமானை வழிபட்டு சென்றனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி