இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டியை நடத்தக் கூடாது என அகிலேஷ் பாரதிய இந்து மகா சபா என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த அமைப்பினர் மைதானத்தில் அருகே சாலையில் போட்டி நடக்கக் கூடாது என வேண்டி யாகம் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக அந்த அமைப்பின் எதிர்ப்பை சுட்டிக் காட்டி வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் முறையிட்டு இருந்தனர். ஜெய் ஷா நிச்சயமாக வங்கதேச அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி கூறி இருந்தார். அதன்படி தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் வீரர்களுக்கு கான்பூரில் உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கதேச நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த கலவரத்திலும் அதன் தொடர்ச்சியாகவும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடந்ததாக கூறி அகிலேஷ் பாரதிய இந்து மகா சபா அமைப்பு வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தின் அருகே போட்டி நடக்கக்கூடாது என யாகமும் நடத்தி உள்ளது. அந்த யாகத்தை நடத்தியவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர். இதன் இடையே இந்தியா மற்றும் வங்கதேச வீரர்கள் கான்பூர் வந்து அடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் அறைக்கு செல்லும் வரை உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இரண்டு அணிகளுமே கான்பூரில் உள்ள லேண்ட் மார்க் என்ற சொகுசு ஹோட்டலில் தங்கி உள்ளன. அந்த ஹோட்டலையும், ஹோட்டலை சுற்றியுள்ள பகுதிகளையும் பல்வேறு பிரிவுகளாக பிரித்து காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதை தவிர்த்து கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்து இருந்து சுடும் ஸ்னைப்பர்கள், மோப்ப நாய்கள், வெடிகுண்டை கண்டறியும் குழு என கூடுதல் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 27 அன்று கான்பூரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.
முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அஸ்வின், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் சதம் அடித்து இருந்தனர். அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.