கன்னியாகுமரி,ஜனவரி 6:
தமிழ்நாட்டை நோயில்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜனவரி 8, 2026 (வியாழக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.01.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த முகாமில் பொது மருத்துவம், இதயம், நரம்பியல், எலும்பு முறிவு, மகப்பேறு மற்றும் குழந்தை நலன் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் நிபுணர்களால் வழங்கப்பட உள்ளன.
ஆண்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மருத்துவப் பரிசோதனை செய்து அட்டை பெற்றவர்களுக்கு இம்முகாமில் உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களும் முகாமில் வழங்கப்படவுள்ளன.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
பத்மநாபபுரம் நகராட்சி, முத்தலக்குறிச்சி, இரணியல், விலவூர், திருவிதாங்கோடு ஆகிய பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் சடையமங்கலம், நுள்ளிவிளை, கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது முழு உடல் பரிசோதனையைத் தவறாமல் செய்துகொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த இலவச மருத்துவ முகாமினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
