வாணியம்பாடி,ஜூன்.26- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் பொதுமக்களின் வரவேற்பை பெற்று காரில் இருந்து இறங்கி நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட எல்லையான மாதனூரில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட கழக செயலாளர் க.தேவராஜி, மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்திரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் பூங்கொத்து வழங்கி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஆம்பூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆ.செ.வில்வநாதன் தலைமையில் நகர கழக செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கொண்டு இருந்த மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். அப்போது பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.மேலும் சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த தாய்மார்கள் வைத்திருந்த குழந்தைகளை வாங்கி கொஞ்சினார்.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டு சாலையில் வாணியம்பாடி நகர கழக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் தலைமையில் நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் ஜனதபுரம் பகுதியில் உதயேந்திரம் பேரூர் கழக செயலாளர் ஆ. செல்வராஜ் தலைமையில் கட்சியினர் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி முன்பாக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் தலைமையில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமோதரன், மத்திய ஒன்றிய செயலாளர் வி.ஜி.அன்பு மற்றும் கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
வாணியம்பாடி அடுத்த செட்டியபனூர் பகுதியில் காரில் இருந்து இறங்கிய முதல் அமைச்சர் நடந்து சென்று சாலை இருபுறம் நின்றுகொண்டு இருந்த பொதுமக்களின் வரவேற்பை பெற்று, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின்னர் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் நடைபெறும் கலைஞரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டு சென்றார்.
