திருநெல்வேலி,நவ.24:-
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன.

வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் ஆகியோர், இன்று (நவம்பர்.24) காலையில், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரத்தியேகமாக செய்தியாளர்களை, சந்தித்தனர்.
அப்போது, சபாநாயகர் மு. அப்பாவு, கூறியதாவது:-
“தென் மாவட்டங்களில், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்கடி மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக நல்லமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தால் யாரும் பாதிக்கக்கூடாது என்பதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு உள்ளன. இம்மாவட்டத்தில், 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ள வெள்ளநீர் கால்வாயில், தாமிரபரணி ஆற்றிலிருந்து, கடலில் கலக்கும் உபரி நீர், திறந்து விடப்படும்.

திருநெல்வேலி மாவட்டத்தில், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் மிக அதிக அளவில் பாதிப்படையும் இடங்கள் 7, அதிக அளவில் பாதிப்படையும் இடங்கள் 24, மிதமாக பாதிப்படையும் இடங்கள் 3, குறைந்த அளவு பாதிப்படையும் இடங்கள் 38 என, மொத்தம் 72 இடங்கள் வருவாய்த்துறை அலுவர்களால், உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மழை வெள்ளம் போன்ற பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களை, பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக, கல்வி நிறுவனங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் என, மொத்தம் 213 இடங்கள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு மீட்புத்துறை, மின்துறை, நீர்வளத்துறை, பொதுபபணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள், மழை வெள்ளம் தொடர்பாக, ஒவ்வொரு பகுதியிலும் பொது மக்களிடயே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எந்த நிலையையும் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
எனவே, மாவட்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை!”- இவ்வாறு, சபாநாயகர் அப்பாவு, செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தெரிவித்ததாவது:- ” மழை தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டத்திற்கு, “சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்” விடுத்துள்ள “ஆரஞ்சு” எச்சரிக்கையை தொடர்ந்து, இம்மாவட்டத்தில் பேரிடர்களுக்கு உதவிடும் வகையில், “தேசிய பேரிடர் மீட்பு குழு” வீரர்கள் 26 பேரும், மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் 28 பேரும், இங்கு வந்து சேர்ந்துள்ளனர். இவர்களை தவிர தீயணைப்பு மீட்பு துறை வீரர்கள், பாம்பு பிடிப்பவர்கள் ஆகியோருடன், மீட்பு படகுகள், ஜேசிபி எந்திரங்கள், மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள் போன்ற மீட்பு உபகரணங்களும், தயாராக வைக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளம் குறித்து, மாவட்ட மக்கள் பயம் கொள்ள தேவையில்லை. 1077 என்னும் “கட்டணமில்லா” தொலைபேசியிலும், 0462-2501070 என்னும் “மாவட்ட ஆட்சியர்” அலுவலக தோலைபேசியிலும், 97865 66111 என்னும் வாட்ஸ் அப் எணணிலும், தகவல் தரலாம்! உதவிகள் பெறலாம்! இவை தவிர, 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மையத்துடனும், தொடர்பு கொள்ளலாம். மழை வெள்ளம் தொடர்பாக, யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்! மீறி பரப்புவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!”- இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தெரிவித்தார்.*திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
