கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குறள் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்ட உதவிகளைத் தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் எனவும், தாட்கோ மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரிய உறுப்பினர் அட்டைகளை விரைந்து வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, காவல்துறையினர் மற்றும் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன் பாவலர் ரியாஸ்.
