Headlines

கன்னியாகுமரியில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

கன்னியாகுமரியில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை

ஊர் கோவில் 14 சென்ட் நிலத்திற்கு முறைகேடாக பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட புதூர் பொதுமக்கள்

நாகர்கோவில், ஏப். 8:

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புதூர் பகுதியில், ஊர் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் 14 சென்ட் நிலத்திற்கு, பொன்சந்திரன் மற்றும் அசோகன் ஆகிய இருவரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு காரணமாகக் கூறப்படும் கிராம நிர்வாக அதிகாரி ராகுல் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, புதூர் பகுதி பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்த பொதுமக்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கையில் ஏந்தியபடி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “ஊர் கோவில் நிலத்தை தனிநபர்களின் பெயரில் மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக விசாரணை நடத்தி, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் வரவிருக்கும் தேர்தலை புறக்கணிப்போம்,” என தெரிவித்தனர்.

இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக்கொண்டனர்.

இந்த சம்பவம், தேர்தல் சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *