நாகர்கோவில்: தமிழகத்தில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு DYFI மாவட்ட செயலாளர் தோழர் விஷ்ணு தலைமை தாங்கினார். RYA அமைப்பைச் சேர்ந்த தோழர் அனிற்டா பிரின்ஸ் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, SFI மாவட்ட செயலாளர் தோழர் சந்துரு, AIPWA மாவட்ட தலைவர் தோழர் கார்மல், AIDWA மாவட்ட செயலாளர் தோழர் ரகுபதி, DYFI மாவட்ட பொருளாளர் தோழர் விபின், RYA மாவட்ட கன்வீனர் தோழர் சகாய பிரின்ஸ் மற்றும் தோழர் இராஜரத்தினம் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வின் நிறைவில் DYFI மாவட்ட துணைத்தலைவர் தோழர் காவ்யா நிறைவுரையாற்றினார். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நீண்டகாலமாக அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றன. மாநில அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இடதுசாரி அமைப்புகள் மாநிலம் தழுவிய இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
