Headlines

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு!நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

300 ஆண்டுகள் பழமையான கோதண்டராமசாமி கோவில் மீட்பு! நீதிமன்ற உத்தரவுப்படி புதிய கமிட்டியிடம் சாவி ஒப்படைப்பு.!

கோவை தெற்கு வட்டம், உப்பார வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோவில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இக்கோவில் நிர்வாகம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் சாவியானது புதிய கமிட்டியிடம் நேற்று (ஜூலை 2) முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் 1972ஆம் ஆண்டு உத்தரவின்படி, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாகக் குழுவே இக்கோவிலை நிர்வகிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி, எந்தவிதப் பொறுப்பும் இல்லாத ஒரு சில நபர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டு, கோவிலை ஆக்கிரமித்து பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தன்னிச்சையான இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த கோவில் கமிட்டியினர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடர் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில், கோவிலை உரியவர்களிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று (02.07.2026) இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் கோவிலை மீட்கும் நடவடிக்கை நடைபெற்றது.

தொடர்ந்து, சட்டப்படியான ஐந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குள் ஒரு ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் முடிவில், அருள்மிகு கோதண்டராமசாமி கோவில் கமிட்டியின் புதிய தலைவராக பி. மருதராஜன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முறைப்படி கோவிலின் சாவி புதிய ஐந்து நபர்கள் கொண்ட கமிட்டி குழுவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. 300 ஆண்டுகள் பழமையான கோவில் மீட்டெடுக்கப்பட்டு, உரிய சமூக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *