நாகர்கோவில், மார்ச் 20 :
தனியார் தொலைக்காட்சியில் நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக இளைஞர்கள், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
விவாதத்தின் போது அமைச்சர் பேசத் தொடங்கியதும், கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தொடர்ந்து விசில் அடித்தும், கிண்டல் செய்தும் இடையூறு செய்தனர்.
ஆரம்பத்தில் இந்தச் சலசலப்பைச் சமாளிக்க முயன்ற அமைச்சர், தொடர்ந்து இளைஞர்கள் விசில் அடித்ததால் ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்து பொறுமையிழந்தார்.
தன்னை நோக்கி விசில் அடித்த இளைஞர்களைப் பார்த்து, “நாங்கலாம் விசில் அடிக்கிறப்ப நீங்க உங்க அப்பா கோமணத்துக்குள்ள இருந்தீங்கடா” என்று நேரலையில் மிகவும் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.
ஒரு அமைச்சர் பொதுவெளியில், அதுவும் தொலைக்காட்சி விவாதத்தில் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியது அங்கிருந்த நெறியாளர் மற்றும் பார்வையாளர்களை ஒரு கணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது இந்தச் சம்பவத்தின் வீடியோ துணுக்கு சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி விவாதத்தில் அமைச்சர் பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து மீம் கிரியேட்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரைத் தீவிரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் நிதானமிழந்து இப்படிப் பேசுவதா என எதிர்க்கட்சியினரும் இணையவாசிகளும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
