Headlines

பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

பூண்டி கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிரந்தர மேலாளரை நியமிக்க வலியுறுத்தல்: 5 கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் மனு!

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூண்டியில் செயல்பட்டு வரும் DD320 பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உடனடியாக நிரந்தர மேலாளரை நியமித்து, சங்கத்தின் செயல்பாடுகளை சீரமைக்க வலியுறுத்தி பூண்டி, கவுஞ்சி, நாட்டாம்பட்டி, போளூர், கிளாவரை ஆகிய 5 கிராம மக்கள் சார்பில் தெய்வேந்திரன் என்பவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், பூண்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சுற்றியுள்ள 5 கிராம மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் மூலம் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள், பயிர் கடன் மற்றும் நகைக்கடன்களைப் பெற்று வந்தனர். கடந்த காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகச் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு பாராட்டுகளையும் பெற்ற பெருமை இச்சங்கத்திற்கு உண்டு.

ஆனால், தற்போது இச்சங்கத்திற்கு நிரந்தர மேலாளர் இல்லாத காரணத்தால் அன்றாட வரவு-செலவு கணக்குகளைப் பராமரிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு நகைக்கடன் பெற முடியாமலும், ஏற்கனவே அடமானம் வைத்த நகைகளைத் திரும்பப் பெற முடியாமலும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அரசு அறிவிக்கும் மானியங்கள் மற்றும் சலுகைகள் உரிய நேரத்திற்குப் பயனாளிகளுக்குச் சென்றடையாமல் தேங்கிக் கிடக்கின்றன.

தொடர்ந்து நிலவும் இந்த அவலநிலையால் விவசாயிகள் மத்தியில் கூட்டுறவு சங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உடனடியாக நிரந்தர மேலாளரை நியமித்து, அதன் செயல்பாடுகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் ஆட்சியரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *