நாகர்கோவில், மார்ச் 25 :
கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளைக் கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, தளவாய் சுந்தரம் தனது சுயலாபத்திற்காக கன்னியாகுமரி தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான் இந்த அரசியல் புயலுக்குக் காரணம்.
ஒட்டுமொத்த மாவட்டத்தையும் ஒருவரே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கின் உச்சமாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்தக் கொந்தளிப்பின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறார் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். “கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமுதாயத்தின் வாக்குகள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அந்தச் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறதா?” என அவர் பகிரங்கமாகவே கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால், இந்த ஆவேசத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம் அவரது மகள் ஸ்ரீலிஜா முருகேசன்தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாகர்கோவில் தொகுதியில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீலிஜா முருகேசன் தீவிர களப்பணியாற்றி வந்தார்.
ஆனால், கூட்டணிக்காகத் தொகுதி தாரைவார்க்கப்பட்டதால் விரக்தியடைந்த நாஞ்சில் முருகேசன், நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
தளவாய் சுந்தரத்தின் மீதான இந்த அதிருப்தி இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே புகைந்து கொண்டிருக்கிறது.
சசிகலாவைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டுப் பின்னர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட தளவாய் சுந்தரத்துக்கு மட்டும் எப்படி சீட் வழங்கலாம் எனத் தொண்டர்கள் கொதிக்கின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அக்டோபர் 2024-ல் நாகர்கோவிலில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் கலந்துகொண்டு அவர் காவிக் கொடி ஏற்றிய நிகழ்வு அனைவரின் நினைவிலும் பசுமையாக உள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி முறிந்திருந்த அந்த நேரத்தில், கட்சியின் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டதால் எடப்பாடி பழனிசாமியால் தற்காலிகமாகப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் தளவாய் சுந்தரம். அப்படியொரு பாஜக ஆதரவு மனநிலை கொண்டவர், இப்போது திட்டமிட்டே ஐந்து தொகுதிகளை அந்தத் தரப்பிற்கே தாரைவார்த்துவிட்டு மாவட்ட அதிமுகவை அடகு வைத்துவிட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்தத் தொகுதிப் பங்கீட்டால் நாகர்கோவில் மட்டுமின்றி, பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் ஆகிய மற்ற நான்கு தொகுதிகளிலும் அதிமுகவின் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் போன்ற மூத்த தலைவர்கள் ஆதிக்கம் செலுத்திய மாவட்டம் இது. தற்போது இந்தத் தொகுதிகளில் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
குளச்சலிலோ, பத்மநாபபுரத்திலோ திறமையான நிர்வாகிகள் தங்களுக்குச் சீட் கேட்டு முன்னுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஒட்டுமொத்த தொகுதிகளையும் கூட்டணிக்காகத் தியாகம் செய்வது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, தளவாய் சுந்தரத்தைத் தாண்டி மாவட்டத்தில் வேறு எந்த அதிமுக முகமும் வளர்ந்துவிடக் கூடாது எனத் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குமுறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
தன் ஒருவருக்கான சீட்டை மட்டும் உறுதி செய்துகொண்டு, மற்ற நிர்வாகிகளின் உழைப்பை மதிக்காமல் போனதன் விளைவை இப்போது கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எதிர்கொண்டு வருகிறது.
நாஞ்சில் முருகேசனின் சுயேட்சைப் போட்டி அறிவிப்பு என்பது ஒரு சிறு பொறிதான். இது மற்ற தொகுதிகளிலும் பரவினால், அது தளவாய் சுந்தரத்தின் அரசியல் கணக்குகளைத் தவிடுபொடியாக்குவது மட்டுமின்றி, குமரி மாவட்டத்தில் அதிமுக என்ற மாபெரும் பேரியக்கத்தின் வாக்கு வங்கியையே அதலபாதாளத்திற்குத் தள்ளிவிடும் என்பதே கள எதார்த்தம்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
