Headlines

திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!

திமுக விரித்த சிகப்பு கம்பளம்… தவெகவுக்கு தாவும் தர்மயுத்தம்?: எடப்பாடியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ‘கையெழுத்து’ போடப்போகிறாரா ஓபிஎஸ்?!

தமிழக அரசியலில் எப்போதுமே ஆச்சரியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணத்தை கவனிப்பவர்களுக்கு, ‘அடுத்து எந்தப் பக்கம் திரும்பப் போகிறார்?’ என்பதே பெரிய புதிராக உருவெடுத்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதலில் எடப்பாடி பழனிசாமியால் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு, கட்சியிலிருந்தும் முறைப்படி வெளியேற்றப்பட்டார் ஓபிஎஸ். வீழ்ந்துவிட்டதாகக் கருதப்பட்ட அந்தத் தருணத்தில், ஆளும் திமுக தரப்பு அவருக்குக் கைகொடுத்தது. “தாய் கழகத்துக்குத் திரும்பி விட்டேன்” என்று உருகி, அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னிலையில் இணைந்த ஓபிஎஸுக்கு, திமுக தலைமை சிவப்புக் கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பை அளித்தது. ஆனால், அந்தச் சிவப்புக் கம்பளத்தின் சூடு தணிவதற்குள், தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைக்கும் புதிய ‘ஸ்கூப்’ தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

திமுகவில் இணைந்த சில மாதங்களிலேயே, தனக்கு எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் கிடைக்கவில்லை என்ற அதிருப்திப் புகையில் ஓபிஎஸ் வெந்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, “இனி இங்கிருந்தால் நமது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறிதான்” என யோசித்த ஓபிஎஸுக்கு, அவருடைய மகன் ரவீந்திரநாத் ஒரு புதிய வியூகத்தைச் சுட்டிக்காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“அப்பா, வளரும் அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் தலைகீழாகப் பார்க்கும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) தான் நமக்குச் சரியான பிளாட்பார்ம்!” என்று ரவீந்திரநாத் ஆலோசனை வழங்க, அதைக் கேட்டு ஓபிஎஸ்சும் கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம். அடுத்த கட்டமாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூகவாதி ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் ரவீந்திரநாத் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த விவரங்கள் தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட, தென்மாவட்ட அரசியலில் ஓபிஎஸின் நுழைவு கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்று கருதி அவரும் ‘பச்சைக்கொடி’ காட்டிவிட்டதாகத் தெரிகிறது.

தென்மாவட்டங்களில் முக்கலத்தோர் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கவும், அங்குள்ள அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஓபிஎஸின் அனுபவம் உதவும் என்பது தவெக தலைமையின் கணக்கு. இதற்காகத் தயாராகியுள்ள ஓபிஎஸ், விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்து, இடைத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நின்று தனது பலத்தைக் காட்டப் போவதாகவும் செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன.

அதிமுகவில் தனக்கு முகவரி தந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி, கட்சியையும் குழப்பத்தில் தள்ளியவர் ஓபிஎஸ். அதன்பின், அரசியல் ரீதியாகத் தஞ்சமடைய இடம் தேடிய அவருக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கதவுகளைத் திறந்து சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது திமுக. அந்த வரவேற்பின் ஈரம்கூடக் காயாத நிலையில், சில மாதங்களிலேயே அந்த நன்றியையும் மறந்து, எடப்பாடிக்குச் செய்த அதே துரோகத்தை இப்போது திமுகவுக்கும் செய்ய ஓபிஎஸ் துணிந்துவிட்டாரா?

ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், இப்போது திமுகவைக் கடந்து தவெகவின் கதவுகளைத் தட்டுவது, அவரது ‘நிலையான அரசியல் நிலைப்பாடு’ குறித்த கேள்விகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. தவெகவில் சேர்வதன் மூலம் ஓபிஎஸ் தனது அரசியல் வாழ்வை மீட்டுெடுப்பாரா அல்லது தொடர் கட்சித் தாவல்களால் தன் எஞ்சிய அரசியல் நம்பகத்தன்மையையும் இழப்பாரா என்பதைப் இனிவரும் காலங்களில் பார்க்கலாம்..

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *