Headlines

இடைத்தேர்தல் களம்: பாஜகவின் அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் பயன்பாடு பலிக்குமா? – தாராபுரம், மதுராந்தகம் ஹாட் ரிப்போர்ட்!

இடைத்தேர்தல் களம்: பாஜகவின் அரசியல் அறிவியல் மற்றும் உளவியல் பயன்பாடு பலிக்குமா? - தாராபுரம், மதுராந்தகம் ஹாட் ரிப்போர்ட்!

தமிழக அரசியல் களத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கும் சூழலில், தற்போது 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்றியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டுமே எஸ்சி (SC) பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள்.
பட்டியலினப் பிரிவில் 76 ஜாதிகள் உள்ளபோதிலும், தொகுதிவாரியான சமூகக் கட்டமைப்பு வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாஜகவின் (சமூகப் பொறியியல்) கணக்குகள் இந்த இடைத்தேர்தலில் எடுபடுமா என்ற விவாதம் காரசாரமாகத் தொடங்கியுள்ளது.

மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை, பட்டியலின சமூகத்தில் ஆதிதிராவிடர் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இருப்பினும், இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது வன்னியர் சமூக மக்கள்தான். இதுதவிர முதலியார், செட்டியார், நாயுடு மற்றும் ரெட்டி சமூகத்தினரின் வாக்குகளும் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக நிற்கின்றன.
திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள இ.பரந்தாமன் தொகுதி மக்களுக்குப் பரிச்சயமானவர்தான். பூந்தமல்லி, எழும்பூர் தொகுதிகளில் போட்டியிட்ட அனுபவம் கொண்டவர். இருப்பினும், மதுராந்தகம் உள்ளூர் ஆதிதிராவிடர் சமூகத்தில் மாவட்ட அல்லது மாநில அளவில் ஆளுமைமிக்க தலைவர்கள் திமுகவில் இல்லாததால், பரந்தாமன் இங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளார் என்ற பேச்சு நிலவுகிறது.

திமுகவின் பிளஸ்: கூட்டணி தோழர்களான விசிகவின் பனையூர் பாபு, மதிமுகவின் மல்லை சத்யா ஆகியோரின் களப்பணி பரந்தாமனுக்குப் பெரிய பலம்.

அதிமுகவின் பிளஸ்: திருக்கழுங்குன்றம் ஆறுமுகம் மற்றும் ராஜ்யசபா எம்.பி தனபால் ஆகியோரின் செல்வாக்கு அதிமுகவுக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.

தாராபுரம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அருந்ததியர் சமூக மக்களும் அடர்த்தியாக வசிக்கின்றனர். ஆனால், வெற்றிச் சாவி என்னவோ கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூக மக்களின் கையில்தான் உள்ளது. தாராபுரம் நகரப் பகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களும், புறநகரில் முதலியார் மற்றும் நாயுடு சமூக மக்களும் பரவலாக உள்ளனர்.
திமுக சார்பில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளரின் மனைவி வழக்கறிஞர் எஸ். சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் சுகன்யாவின் கணவர் இளைஞரணி நிர்வாகி என்பது முதல் பலம் என்றால், அவரது சொந்த கிராமமான தளவாய்பட்டினம் ஒரு மிகப்பெரிய ‘தலக்கட்டு’ கிராமம். ஆனால், திமுகவில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வலுவான மாவட்ட அல்லது மாநில அளவிலான முகங்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. தொகுதிக்குள் ஜெயித்து அமைச்சரான கயல்விழி செல்வராஜ் கூட, மற்றொரு அமைச்சரான மு.பெ. சாமிநாதனின் நிழலில் ஓரங்கட்டப்பட்டிருந்தார் என்ற விமர்சனமும் உள்ளது. இங்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் உறவினர்கள் தளவாய்பட்டினத்தில் வசித்தாலும், அக்கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லாதது கூடுதல் சுவாரஸ்யம்.

பொதுவாக, திமுகவில் தனித் தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் இரண்டு முறைக்கு மேல் வெற்றி பெறுவதும் அரிது; அவர்களுக்கு மீண்டும் சீட் கிடைப்பதும் அரிது. பெரும்பாலான தனித் தொகுதிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிவிடப்படும்.
திமுகவின் 77 மாவட்டச் செயலாளர்களில் கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர் சமூகங்களில் தலா 15 பேர் வரை பதவி வகிக்கும் நிலையில், நாடார், முதலியார், நாயுடு சமூகங்களுக்குத் தலா 5 பேர் மட்டுமே உள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த 76 ஜாதிகள் இருந்தும், கடலூர் சி.வி. கணேசன் (ஆதிதிராவிடர்), தென்காசி ஈ.ராஜா (தேவேந்திர குல வேளாளர்) ஆகிய இருவருக்கு மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இந்தச் சமூகச் சமனின்மையைத்தான் அன்று எம்.ஜி.ஆரும், இன்று விஜய்யும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதேநேரம், அதிமுகவிலும் நிலைமை பெரிய மாற்றமில்லை — தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் கூட இல்லை; ஆதிதிராவிடர் சமூகத்தில் இருந்த பெஞ்சமின் போன்றவர்களும் மாறிச்சென்றுவிட்டனர்.

எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக இரட்டை இலை ரசிகர்கள் இன்றும் வாழும் தொகுதிகள் இவை. தாராபுரத்தில் சத்யபாமா, மதுராந்தகத்தில் மரகதம் என ராஜினாமா செய்த இருவருக்கும் தமிழக வெற்றிக் கழகம் வாய்ப்பளித்தால், விஜய் முகத்திற்காகவும், வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கிற்காகவும் வாக்குகள் குவிய வாய்ப்புள்ளது. “ஜெயித்து மூன்று மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலா?” என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினாலும், அது பொதுமக்களின் வாக்கு வங்கியைப் பெரிய அளவில் பாதிக்காது என்றே களநிலவரம் சொல்கிறது.

களநிலவரம் :
தாராபுரம்: அதிமுக + பாஜக கூட்டணி பலமாக உள்ளது. தவெக கூட்டணி உறுதியானால் IUML மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க வாக்குகளின் நகர்வு முக்கியத்துவம் பெறும்.

மதுராந்தகம்: அதிமுக + பாமக கூட்டணி பலத்துடன் களமிறங்குகிறது. இங்கு விசிக மற்றும் மதிமுக வாக்குகள் திமுகவுக்குக் கை கொடுக்கும். நாம் தமிழர் கட்சியின் சீமான் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இரு தொகுதிகளிலுமே திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றாலும், தற்போதைய நிலவரப்படி ஆளுங்கட்சியான தவெக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஒரு தரப்பு கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், களத்தில் கட்சிகளின் கடைசி நேரச் செயல்பாடுகளே இறுதி முடிவை தீர்மானிக்கும். இதையெல்லாம் தாண்டி, “ஈ.வி.எம் (EVM) இயந்திரம் இருக்கும் வரை எதையும் மாற்றலாம்; அமித் ஷாவின் பார்வை பக்கம் ஈ.வி.எம் திரும்புமா?” என்ற சந்தேக அரசியல் கேள்விகளும் எழாமல் இல்லை. இந்த இடைத்தேர்தலிலாவது ஈ.வி.எம் குளறுபடிகள் இன்றி தேர்தல் நேர்மையாக நடந்தால் நல்லது என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு! 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *