பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்துவதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

பழனியில் நடைபெற்ற தனியார் பேக்கரி திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விக்னேஷ் வருகை தந்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்திற்குச் சென்றபோது, மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், நகரச் செயலாளர் மிதுன், பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்த சாமி படத்திற்கு அமைச்சர் விளக்கேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் நிர்வாகிகள் வழங்கிய நினைவுப் பரிசையும் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தனியார் பேக்கரி திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விக்னேஷ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பழனி சண்முக நதி, வையாபுரி குளம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

பழனி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் விளங்கும் சண்முக நதியை சீரமைத்து தூய்மைப்படுத்துவதற்காக ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீட்டிற்கான திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திருஆவினன்குடி பகுதி மற்றும் பழனி வையாபுரி குளத்தை சீரமைப்பதற்காக ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் பழனி சண்முக நதி மற்றும் வையாபுரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைப்பதற்காக மொத்தம் ரூ.3 கோடியே 65 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை குறித்து… டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களை ஏற்றி இறக்கும் போதும், கையாளும் போதும் ஏற்படும் சேதங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாட்டில்கள் உடையாமல் பாதுகாப்பாக கையாள்வது பணியாளர்களின் பொறுப்பு என்றார்.
அதேநேரத்தில், டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உணர்ந்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். சில இடங்களில் பாட்டில்கள் உடையாத நிலையிலும் தவறான கணக்குகள் காட்டப்படுவதாக கூறப்படும் புகார்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து, ஊழியர்களின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
பள்ளிகள் அருகே உள்ள மதுக்கடைகள் மாற்றம் பள்ளிகள் மற்றும் ஆன்மீக வழிபாட்டு தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மாற்றுவது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், தற்போதுள்ள சட்ட விதிமுறைகளின்படி குறிப்பிட்ட தொலைவு இடைவெளியை பின்பற்றி கடைகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இருப்பினும், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கருதப்படும் மதுக்கடைகள் குறித்து பொதுமக்கள் அல்லது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உரிய மாற்று இடத்தைச் சுட்டிக்காட்டினால், அந்தக் கடைகளை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
சட்டவிரோத ஸ்பிரிட் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை கேரளாவில் கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக ஸ்பிரிட் கடத்தப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கள்ளுக்கடைகள் தொடர்பாக நடைபெற்று வரும் ஆய்வுகள் நிறைவடைந்த பின்னர், முதலமைச்சர் உரிய முடிவை எடுப்பார் என்றும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 89733 50663
