திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 103 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை கொண்ட தமிழகத்தின் இரண்டாவது கோயிலாக மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கோயிலில் கொடிமரம் மற்றும் உண்டியல் கோவில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு அதிக வருவாய் ஈட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான கடைகள், திருமண மண்டபம், வீடுகள், மூலமாக வாடகையாக மாதந்தோறும் இரண்டு லட்சத்திற்கு மேல் கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது. கோயிலின் வரவு , செலவு ஊர் நாட்டாமை மூலமாக செய்து வந்த நிலையில், கணக்கு வழக்கு சம்பந்தமாகவும் , கோயில் நிர்வாகம் சம்பந்தமாகவும், பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வந்தது. இதனிடையே தற்போது பொதுமக்களில் சிலர் ஊர் கணக்கு வழக்கு முறைகேடு சம்பந்தமாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்திருந்தனர். ஆனால், புகார் மனு தொடர்பாக இன்று வரை இந்துசமய அறநிலைய துறை சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் குறிப்பிட்ட வருமானம் வரும் கோயில்களை இந்துசமய அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து நிர்வாகம் செய்து வரும் நிலையில், திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் மட்டும் இன்றுவரை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதே சமயம் கோயில் மூலமாக கிடைக்கும் வருமானங்கள் தனிநபர் பயன்பாட்டிற்கு சென்று விடுவதாகவும், அதைப்பற்றி ஊர் நாட்டாமை மற்றும் கோயில் முக்கியஸ்தர்களிடம் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டல் விடுப்பதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனை சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள க்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு கோயில் வருமானத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் , பக்தர்கள் , பொதுமக்கள் என பலர் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.