திருநெல்வேலி,நவ. 5:-
திருநெல்வேலி “மனோன்மணியம் சுந்தரனார்” பல்கலைக்கழகத்தின், “முதலாவது துணைவேந்தர்” பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் “நூற்றாண்டு விழா” செவ்வாய்க்கிழமை (நவம்பர்.4)காலையில், பல்கலைக்கழக “செனட் ஹால்” கட்டிடத்தில், மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதை அடுத்து, “ஒளியொலி (AV) விளக்கக்காட்சி” மூலமாக, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி, முதலாவது துணைவேந்தரின் கல்வித் தொலை நோக்கு, பணி வாழ்வு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றை, நினைவூட்டும் காட்சிகள் திரையிடப்பட்டன.
“பல்கலைக்கழக பதிவாளர்” பேராசிரியர், முனைவர் ஜே. சாக்ரடீஸ், வரவேற்புரை யாற்றி, விழாவின் சிறப்பை, எடுத்துக் கூறினார்.
இப்போதுள்ள துணைவேந்தர் பேராசிரியர், முனைவர் என். சந்திரசேகர் தலைமையேற்று, முதலாவது துணைவேந்தர் பேராசிரியர், முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம், தமிழ் நாட்டின் உயர்கல்வித் துறைக்கு ஆற்றிய முன்னோடியான பங்களிப்புகளையும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக அவர் அமைத்த உறுதியான அடித்தளங்களையும், விரிவாக விளக்கினார்.
மேலும், “பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரத்தின், தொலைநோக்கு பார்வையும், கல்வித் தத்துவமும், இன்றளவும் பல்கலைக்கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும், வழிகாட்டிடும் ஒளிவிளக்காக திகழ்கின்றன!” என்று, குறிப்பிடடார்.
தொடர்ந்து பேசிய துணைவேந்தர் சந்திர சேகர் “பல்கலைக்கழகத்தின், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடப்பிரிவுகள் நடைபெறும் வளாகம், இனிமேல் ‘பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரம் நூற்றாண்டு வளாகம்’ என அழைக்கப்படும்! என்று, அறிவித்தார்.
மேலும், பேராசிரியர் வேதகிரி சண்முகசுந்தரம் பெயரில், 5 லட்சம் ரூபாய்க்கான “கல்வி அறக்கட்டளை”ஒன்று, ஏற்படுத்தப்படும்!” என்றும், துணைவேந்தர் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் முனைவர் கே. சொக்கலிங்கம், பேராசிரியர் முனைவர் ஏ. கே. குமாரகுரு, பேராசிரியர் முனைவர் கே. பிச்சுமணி ஆகியோர் தங்கள் பாராட்டுரைகளில், முதலாவது துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம், கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகள், நிர்வாகத் திறன்கள், ஆளுமை ஆகியன குறித்து, பேசினர்.
நிறைவாக, வேதகிரி சண்முகசுந்தரம், ஏற்புரை நிகழ்த்தினார். தனக்கு விழா எடுத்த, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கும், அதன் கல்விக் குடும்பத்திற்கும், நன்றியை தெரிவித்தார்.
பல மொழிப்புலத் துறை டீன் பேராசிரியர் முனைவர் எஸ். பிரபாகர், அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்: “மேலப்பாளையம்” ஹஸன்
