திருநெல்வேலி, அக்.23:- மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு மண்டல பகுதிகளிலும், பல்வேறு தூய்மை பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, திருநெல்வேலி, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் தச்சநல்லூர்
ஆகிய மண்டலங்களில், சுகாதார பிரிவு பணியாளர்களும், பொறியியல் பிரிவு பணியாளர்களும் இணைந்து, தூய்மை பணியாளர்களை கொண்டு, கழிவு நீர் ஓடை தூர்வாருதல், மழைநீர் ஓடையில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றி, மழை நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், பணிகள் மேற்கொள்ளல் மற்றும் தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி,குப்பை வாகனங்கள் மூலம், ராமையன் பட்டி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லுதல், பெரிய ஓடைகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுதல், சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்துதல், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு கணக்கிடுதல், மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மராமத்து பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை செப்பனிடுதல், வாய்க்கால் தூர் வாறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோனிகா ராணா இன்று (அக்டோபர்.23) நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து, பாளையங்கோட்டை மண்டலத்தில், அரிய குளம் சாரதா பெண்கள் கல்லூரி முதல்,மகாராஜா நகர் மாநகராட்சி ஆணையாளர் குடியிருப்பு வரையிலும், திருநெல்வேலி மண்டலத்தில், காட்சி மண்டபம் முதல், தென்காசி நெடுஞ்சாலை வரையிலும்,ஆய்வு மேற்கொண்டு, சாலைகளில் உள்ள சிறு பள்ளங்களை செப்பனிடவும், சாலையின் இருபுறங்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி சார்பாக, மாநகர நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர். ராணி, சுகாதார அலுவலர்கள் பாலசந்தர், முருகன் ஆகியோர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்:”மேலப்பாளையம்” ஹஸன்.
