திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய குணங்களையும் நீக்கி அருள்பவர் என்று சிவனாரைப் போற்றுகின்றனர். இவரை வழிபட்டால், பஞ்ச பூதங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் மிகவும் விரும்பி பார்க்கும் முக்கிய சுற்றுலா தளமான இந்த இடத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் , பொதுமக்கள் என பலர் வந்து செல்கின்றனர். கேரளா , ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் தனியார் ரிசார்ட்டுகளில் தங்கி இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். இப்படிப்பட்ட அழகான இயற்கை அழகும், புண்ணிய ஸ்தலமாக விளங்கும் திருமூர்த்திமலையில், தனியார் ரிசார்ட்கள் திருமூர்த்தி அணைக்கு மிக அருகில் செயல்பட்டு வருகின்றன. அதில் சில தனியார் ரிசார்ட்கள் முறையான அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகவும் , அதுபோன்ற ரிசார்ட்டுகளால் அணையின் நீர் மாசுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த ரிசார்ட்கள் அணைக்கு மிக அருகாமையில் உள்ளதால், ரிசார்ட்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் அணையில் கலக்கப்படுகிறது. திருமூர்த்திமலை அணையிலிருந்து வெளியேறும் அணையின் நீரானது, பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணையின் சுகாதாரத்தை மாசுபடுத்தும் வகையில் இங்குள்ள சில ரிசார்ட் உரிமையாளர்கள் கழிவுநீரை அணையில் கலக்கும்படி செய்கின்றனர். இதுபோன்ற ரிசார்ட்கள் அணைக்கு மிக அருகில் அமைப்பதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் எதன் அடிப்படையில் அனுமதி வழங்கினர். தளி பேரூராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் தனியார் ரிசார்ட்கள் அனைத்தும் உடனடியாக இழுத்து மூட வேண்டும். பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு அணையின் அருகில் தனியார் ரிசார்ட்கள் அமைக்க தடை செய்ய வேண்டும். அணையின் சுகாதாரத்தை சீரழிக்கும் ரிசார்ட் உரிமையாளர்கள் மீது துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.