திருநெல்வேலி, அக். 8:-
முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின.
துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
வருகிற 12-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெறுகின்ற, இந்த போட்டிகளை, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மு. அப்பாவு, கொடி அசைத்து, ஹாக்கி மட்டையை கைகளில் ஏந்தி, முதல் பந்தை அடித்து, முறைப்படி துவக்கி வைத்தார்.
முன்னதாக அங்கு பேசிய சபாநாயகர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை, மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது.
அதிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல், இந்த துறையில், தமிழ்நாட்டு வீரர்கள்- வீராங்கனைகள், இந்திய அளவில், ஆசிய அளவில், உலக அளவில், ஒலிம்பிக் அளவில் வெற்றி பெற்றவர்களாக திகழ்ந்து, தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்து கொண்டு இருக்கின்றார்கள்!”- என்று, குறிப்பிட்டார்.
முன்னதாக ஹாக்கி போட்டியினை ஊக்குவிப்பதற்காக, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து, ஹாக்கி மட்டைகளுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் என, மொத்தம் சுமார் 1000 பேர் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி ஒன்று, புறப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், இந்த பேரணியை துவக்கி வைத்த இந்த பேரணி, ஹாக்கி போட்டிகள் நடைபெறும், அண்ணா விளையாட்டு அரங்கினை, வந்தடைந்தது.
நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, முன்னாள் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், மாநில திமுக செய்குழு உறுப்பினர் “ஏர்வாடி” எஸ்.ஏ.கே. சித்தீக் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்
