கன்னியாகுமரி, திச 15.
கன்னியாகுமரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு மூலம் மீட்கப்பட்ட செல்போன்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று (15.12.2025) காலை சரியாக 9.50 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ₹58 லட்சம் மதிப்பிலான 335 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொதுமக்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களின் IMEI எண்ணை அவசியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், மொபைல் தொலைந்தவுடன் தாமதமின்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து, மொபைல் தொடர்பான முழு விவரங்களையும் வழங்கி CSR நகலை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், குமரி மாவட்டத்தில் சமீப காலமாக நடைபெற்ற உயர் போதை கொண்டாட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டும் சம்பவங்களில் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதுவரை குமரி மாவட்டத்தில் 105 மாணவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். அதேபோல், மாவட்டத்தில் பெரும்பாலான குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக பொதுமக்களிடமிருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் சைபர் பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு, பல மாநிலங்களிலிருந்தும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ₹58 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை மட்டும், மொத்தம் ₹2 கோடியே 5 லட்சம் மதிப்பிலான 1,265 செல்போன்கள் மீட்கப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், அவர்களால் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செல்போன்கள் தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன.
குறிப்பு:
பொதுமக்கள் தங்களது செல்போன் தொலைந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். அல்லது Tamil Nadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். மேலும், CEIR Portal (https://www.ceir.gov.in) இணையதளத்தில் தொலைந்த செல்போனை Block செய்வதன் மூலம், செல்போன் மீட்பிற்கு காவல் துறைக்கு உதவ முடியும்.
திருட்டு செல்போன்களை பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இரண்டாவது முறையாக செல்போன் வாங்கும் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள், அந்த செல்போன் சட்டப்படி உரியதா என்பதை உறுதி செய்ய, வாங்கிய ரசீது, பாக்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து வாங்க வேண்டும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
