கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியில் போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான அறிவு சார் மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அறிவு சார் மையத்தில் தினந்தோறும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கை மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஆன்லைன் முறையில் போட்டி தேர்வுக்கான வகுப்புகள் நடைபெறும் முறைகள் குறித்து கேட்டறிந்து அதற்கான கணினி உபயோக செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ரோடு ரவுண்டானா அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார், விருதாச்சலம் ரோடு ஏரியில் கிணறு உள்வாங்கியதை பார்வையிட்டு மாற்று வழியில் குடிநீர் வழங்க அறிவுரை வழங்கினார். நகர் விமான ஓடுதளத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அங்கு விமான ஓடுதளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், நகராட்சி ஆணையர் இளவரசன், நகராட்சி பொறியாளர் தேவநாதன், மேற்பார்வை பொறியாளர் சாம்பசிவம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர், நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி ராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, நூலக அலுவலர் சுந்தரவல்லி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் : விஜயகாந்த்