வாணியம்பாடி, அக்.19- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் ஆம்பூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கண்டைனர் லாரி முன்னாள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் பின்னால் கதவாளம் பகுதியில் இருந்து மொரம்பு மண் ஏற்றிக்கொண்டு மாதனூர் நோக்கி சென்ற லாரி அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி எதிர் திசையில் சென்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சீர்காழி பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் மொரம்பு மண் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் ஆகிய இருவரும் காயம் அடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.