திருநெல்வேலி,நவ.6:- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், “மணிமுத்தாறு” அணையில் இருந்து, பெருங்கால் பாசன பிசானப்பருவ சாகுபடிக்காக, இன்று [நவ.6] காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், தண்ணீர் திறந்து விட்டார். அப்போது பேசிய அவர், ” விவசாய பெருமக்கள், தண்ணீரை மிகச்சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோக பணியில், நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்!” – என்று, கேட்டுக் கொண்டார்.
அடுத்த ஆண்டு [2025] மார்ச் மாதம் 31-ஆம் தேதி முடிய, மொத்தம் 146 நாட்களுக்கு, விநாடிக்கு 35 கனஅடி வீதம், திறந்துவிடப்படும் இந்த தண்ணீர் மூலம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவி குளம், தெற்கு பாப்பான்குளம் மற்றும் தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய, 5 கிராமங்களில் உள்ள 2756.52 ஏக்கர் “பாசனபரப்பு” பயன்பெறும். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் [ SUB- COLLECTOR ] அர்பித் ஜெயின், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் “பரணி” சேகர், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர் முருகன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோணி அம்மாள், வட்டாட்சியர் நவாஸ், உதவி செயற்பொறியாளர்கள் ராம் சூரியன், தினேஷ் குமார் ஆகியோர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.