தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி , குழந்தைகள் தின விழா மற்றும் மகிழ்முற்றம் குழுக்கள் அமைக்கும் துவக்க விழா இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் பிரியா தலைமை வகித்தார். மகிழ்முற்றம் தொடக்க விழா மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் அவர்களின் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகிறது. அதன் அடிப்படையில் பள்ளி மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி,முல்லை, மருதம் நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து ஒவ்வொரு குழுவுக்கும் மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடையே குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்த மாணவர் குழுக்கள் அமைக்கப்படுகிறது என்று பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் தெரிவித்தார்.
மேலும் ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழு தலைவரின் கீழும் ஐந்து மாணவர்கள் குழுவாக இணைந்து செயல்படுவர். அவராக ஐந்து குழுக்களுக்கும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்று கொண்டனர் மேலும் மாதம் தோறும் அவர்களின் செயல்பாடுகளை குறிப்பதற்காக தகவல் பலகையும் திறக்கப்பட்டது. தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
குழந்தைகள் தின விழா பள்ளி மாணாக்கர்களுக்கு ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.
நிகழ்வில் உடுமலை ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்வில் இராகல்பாவி ஊராட்சி மன்ற செயலாளர் சேகர் , உடுமலை தமிழிசைச் சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஹமீது மற்றும் கல்வியாளர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பிரியங்கா நன்றி கூறினார்.
உடுமலை : நிருபர்: மணி