திருநெல்வேலி :- நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி வர்த்தக மையத்தில், 8-வது ஆண்டு பொருநை புத்தக திருவிழா வெள்ளிக்கிழமை [ஜன.31] தொடங்கியது. இம்மாதம் [பிப்] 9-ஆம் தேதி வரையிலும், மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிற இந்த திருவிழாவினை, சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள பிரபல நாவலாசிரியர் வண்ணதாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் எழுதிய, கதை “சொல்லப்போறோம்!” என்னும், புதிய நூலை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், இந்த விழாவில் வெளியிட்டார். மொத்தம் 125 ஸ்டால்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான, பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. தினசரி கருத்தரங்கம், கவியரங்கம், தனிச்சிற்பொழிவு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் ஆகியன, நடைபெற்று வருகின்றன. துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வகாப், நாங்குநேரி “ரூபி” ஆர்.மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.