கன்னியாகுமரி, பிப் 25 :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார், சின்ன அரிப்புத் தெரு பகுதியில் காயமடைந்து பறக்க முடியாமல் தவித்த அரிய வகை கூகை (Barn Owl) ஆந்தையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இப்பகுதியில் இரவு 11 மணி அளவில் அடிபட்டு சோர்வாகக் கிடந்த இந்தப் பறவையைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர் ராஜன் மற்றும் இரவு காவலர் முனியாண்டி விரைந்து வந்து, பறவையை கவனமாக மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர்.
முழுமையாகக் குணமடைந்த பின் இந்தப் பறவை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என பூதப்பாண்டி வன சரக அலுவலர் அன்பழகன் தமிழக விடியல் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதய வடிவ முகத்தைக் கொண்ட இந்த கூகை ஆந்தைகள், ‘விவசாயிகளின் நண்பன்’ என்று அழைக்கப்படுகின்றன.

இவை விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்யும் எலிகளை அதிக அளவில் வேட்டையாடி உண்பதால் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும், துளியும் சத்தமில்லாமல் பறந்து இரையை வேட்டையாடும் திறன் கொண்ட இந்த இரவுநேரப் பறவைகள், இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுபவை ஆகும்.
மூடநம்பிக்கைகளால் சில இடங்களில் இவை துன்புறுத்தப்படும் நிலையில், தக்க சமயத்தில் வனத்துறைக்குத் தகவல் அளித்து விவசாயிகளின் நண்பனான இந்தக் கூகை ஆந்தையைக் காப்பாற்றிய கோட்டார் பகுதி பொதுமக்களின் விழிப்புணர்வை வனத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
