போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து விதிமுறை மீறல்களை தன்னிச்சையாக கண்டறியும் KAAVAL AI – Automatic Traffic Violation Detection System என்ற நவீன கண்காணிப்பு கேமரா அமைப்பை, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஸ்டாலின், ஐபிஎஸ், செவ்வாய்க்கிழமை (09 ஜூன் 2026) காலை தொடங்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த அமைப்பு, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்து விதிமுறை மீறல்களை துல்லியமாகக் கண்டறிவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமை, சீட் பெல்ட் பயன்படுத்தாதது, போக்குவரத்து சிக்னல்களை மீறுவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்களை இந்த அமைப்பு தானாகவே பதிவு செய்யும் திறன் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதி, தினசரி அதிக வாகனப் போக்குவரத்து நடைபெறும் முக்கிய சந்திப்புகளில் ஒன்றாக இருப்பதால், அங்கு இந்த அமைப்பு முதற்கட்டமாக நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து ஒழுங்குமுறையை வலுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக காவல்துறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த AI கண்காணிப்பு அமைப்பு, சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தின் முழுப் பயனும் கிடைக்கும் என்றும், பாதுகாப்பான சாலைப் பயன்பாட்டிற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
