Headlines

ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் மீட்பு…

ஆதரவற்ற முதியவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் மீட்பு...

ஆசிரமத்தில் அனுமதித்த நிமிர் மற்றும் தன்னார்வலர்கள்
மனிதநேயம்

நாகர்கோவில்,மார்ச் 7:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதரவின்றி தவித்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரும், போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவரும் தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு, தோவாளையில் உள்ள அன்னை ஆசிரமத்தில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
₹41,050-த்துடன் மீட்கப்பட்ட முதியவர்.

குருந்தன்கோடு பகுதியில், சுமார் 55 வயது மதிக்கத்தக்கப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வாய் பேச இயலாத முதியவர் ஒருவர் ஆதரவின்றி உருட்டு வண்டியில் அலைந்து திரிவதாகத் தகவல் கிடைத்தது. குமரி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், குளச்சல் ‘நிமிர்’ குழுவினரின் வழிகாட்டுதலின்படி, ‘அவர் பவுண்டேஷன்’ மற்றும் ‘நாம் ஒருவர் அறக்கட்டளை’ தன்னார்வலர்கள் அங்குச் சென்று முதியவரை மீட்டனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் அவர் யாசகம் பெற்றுச் சேமித்து வைத்திருந்த ₹41,050-ஐ எண்ணிய தன்னார்வலர்கள், முதியவரைத் தோவாளை, கோழிக்கோட்டுப் பொத்தையில் உள்ள ‘அன்னை ஆசிரமத்தில்’ அனுமதித்தனர். அங்குள்ளவர்களுக்குப் போதிய கட்டில்கள் இல்லை என்பதை அறிந்து, முதியவரின் பணத்திலிருந்தே ₹15,300 செலவில் 4 கட்டில்கள், 4 தலையணைகள் மற்றும் அவருக்குத் தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை ஆசிரம காப்பாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் மீட்பு:

இதேபோல், நாகர்கோவில் ஒழுகினசேரி ஓட்டுப் புரைத்தெரு பகுதியில் போக்சோ தொடர்பான அலுவல் பணியாகத் தன்னார்வலர்கள் சென்றிருந்தபோது, அங்கு மார்டின் (30) என்ற இளைஞர் ஆதரவின்றி இருப்பதை அறிந்தனர்.

மின்சார வாரியத்தில் பணியாற்றிய புஷ்பகரன் என்பவரின் மகனான இவர், மின் பொறியியல் (EEE) படித்துள்ளார். சொந்த வீடு இருந்தபோதிலும், பெற்றோர் இறந்துவிட்டதால் கவனிப்பாரற்றுப் போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து செயல்பட்ட ‘அவர் பவுண்டேஷன்’ மற்றும் ‘நாம் ஒருவர் அறக்கட்டளை’ தன்னார்வலர்கள், அந்த இளைஞரையும் மீட்டுப் பாதுகாப்பு கருதி அதே அன்னை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டனர்.
ஆதரவின்றித் தவித்த இருவரையும் மீட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து பாதுகாப்பான இடத்தில் சேர்த்த நிமிர் மற்றும் தன்னார்வலர்களின் இந்த மனிதநேயப் பணி, அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *