75 கிராம் கஞ்சா பறிமுதல் – டி.எஸ்.பி. தனஜெயன் உத்தரவின் பேரில் தனிப்படை அதிரடி வேட்டை.
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க, காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனஜெயன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின் பேரில், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், சார்பாய்வாளர் விஜய் மற்றும் போலீஸார் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீஸார் அங்குள்ள ஏ.பி.ஏ கல்லூரி அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக 3 இளைஞர்கள் நின்று கொண்டிருந்துள்ளனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றதாகத் தெரிகிறது. உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார், அவர்களை நாலாபுறமும் வளைத்துப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவர்களைக் குறிவைத்த கும்பல்: முதலில் பிடிபட்ட இளைஞர்கள் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், அவர்கள் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அம்பலமானது. அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 75 கிராம் கஞ்சா உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையிலடைப்பு: விசாரணையில் கைதானவர்கள் மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முகமது ரபி மற்றும் பழனி பாலசமுத்திரத்தைச் சேர்ந்த விகாஸ் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
கைதான 3 பேர் மீதும் பழனி நகர காவல் நிலையத்தில் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பழனியில் கல்லூரி அருகே நடந்த இந்த அதிரடி கைது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
