Headlines

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உருஸ் விழாவைச் சுற்றி தகராறு – வக்ஃபு வாரியத்தின் ஆதரவு சந்தேகத்திற்கு உள்ளாகிறது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உருஸ் விழாவைச் சுற்றி தகராறு – வக்ஃபு வாரியத்தின் ஆதரவு சந்தேகத்திற்கு உள்ளாகிறது.

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் பகுதியில் அமைந்துள்ள தைக்க பள்ளி ஜமாஅத் வருடா வருடம் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி பாரம்பரியமாக உருஸ் விழா நடத்தி வருகிறது.

இதன் பகுதியாக சமீபத்தில் கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமூதாய டிரஸ்ட், மாலிக் தினார் பைத்துல்மால் டிரஸ்ட், தைக்க பள்ளி டிரஸ்ட் ஆகியவை இணைந்து கொடியேற்றத்துடன் விழாவைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், பொதுமக்களின் நிதியில் நடைபெறும் இந்த விழாவில், வக்ஃபு வாரியத்தின் ஆதரவுடன் சையது அஹ்மது முஸ்தபா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழாவின் இரண்டாம் நாளில், சையது அஹ்மது முஸ்தபா குடும்பத்தினர் வக்ஃபு வாரியம் ஆதரவுடன் சம்பந்தப்பட்ட பள்ளிவாசலுக்கு வந்து குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகத் தெரிகிறது. மேலும், சையது அஹ்மது முஸ்தபா பள்ளிவாசலின் சொத்துகளை கையாடல் செய்வதும், விற்பனை செய்வதும் போன்ற செயல்கள் நடப்பதாக பொதுமக்கள் கோஷம் எழுப்பி, சம்பந்தப்பட்ட நபர்களை வெளியேற்றக் கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்திற்கு ஆதரவான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, சையது அஹ்மது முஸ்தபா மீது எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அங்கு சென்ற மாவட்ட ஏ.எஸ்.பி லலித் குமார் இ.கா.ப தலைமையில் போலீசார் சமரசம் செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குமரி மாவட்ட அணைந்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜி.எம்.எஸ். ஷஃபீக் அவர்கள் தெரிவித்ததாவது:
“பொதுமக்கள் மற்றும் நிர்வாகத்திற்கு சொந்தமான சொத்துக்களை, கோட்டார் பகுதிக்கு சம்பந்தமில்லாத திருநெல்வேலி மாவட்டம் பொட்டல் புதூர் பகுதியைச் சார்ந்தவர்களிடம் தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் வக்ஃபு வாரியம் நியமித்த முத்தவல்லி பொறுப்பில் இருந்து நீதிமன்றத்தால் நீக்கப்பட்டவர். வக்ஃபு வாரியம் முஸ்லிம் சமூகத்திற்கும் அதன் நிர்வாகங்களுக்கும் ஆதரவாக செயல்பட வேண்டிய நிலையில், தனிநபர்களுக்கு பக்கபலமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது” எனக் குறிப்பிட்டார்.

இத்தகவல் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் முன்பும் வெளிவந்திருந்தாலும், சரியான தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்தால், கோட்டார் பகுதியைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத்துகளும் ஒன்றிணைந்து, பொதுமக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தைக்க பள்ளி டிரஸ்ட் சார்பில் பொது குழு உறுப்பினர் ரஃபீக் அவர்கள் நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “தைக்க பள்ளி ஊருஸ் என்பது மூன்று நிர்வாகங்கள் ஒத்துழைப்புடன், பொதுமக்களின் நிதியை கொண்டு ஒற்றுமையாக நடத்தப்படுவது. ஆனால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், அதிகார வர்க்கங்களின் உதவியுடன் மக்களிடையே குழப்பம் விளைவிக்க முயல்கின்றனர். பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பாரம்பரியத்தை வக்ஃபு வாரியத்தின் ஆதரவுடன் சிலர் கெடுப்பது மன வேதனை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *