உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் (NSS) மற்றும் கணியூர் காவல் நிலையம் இணைந்து, கணியூர் பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதிநாடகத்தை நடத்தினர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி சிருஷ்டி சிங், IPS அவர்களின் உத்தரவின்படியும், உடுமலைப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமதி தையல் நாயகி DSP அவர்களின் மேற்பார்வையிலும் இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கணியூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக்குமார், காவலர்கள் திரு. சிவகுருநாதன் மற்றும் திரு. நம்மாழ்வார் ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.
“போதை இல்லா உலகை உருவாக்குவோம்!” என்ற முழக்கத்துடன், போதைப் பொருள்களின் தீமைகளை விளக்கும் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவிகள் கணியூரின் முக்கிய சாலைகள் வழியாக பேரணியாகச் சென்றனர். வழிநெடுகிலும் பொதுமக்களிடம் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நலக் கேடுகள் குறித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பேரணியைத் தொடர்ந்து கணியூர் பேருந்து நிலையத்தில் மாணவிகளின் சிறப்பு வீதிநாடகம் நடைபெற்றது. போதைப்பொருள் பயன்பாட்டால் ஒரு குடும்பமும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு சீரழிகிறது என்பதை தத்ரூபமாக மாணவிகள் நடித்துக் காட்டினர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த இந்த வீதிநாடகம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்நிகழ்ச்சியில்
ஜி.வி.ஜி கல்லூரி NSS அலுவலர்கள், முனைவர் சே. மகேஸ்வரி, முனைவர் எ.வைஷ்ணவி, முனைவர் அ. வடிவுக்கரசி, முனைவர் மு. கஜலட்சுமி, கணியூர் கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மாணவிகளின் இந்தச் சமூகப் பணியை வெகுவாகப் பாராட்டினர்.
