Headlines

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கோட்டார்–மணக்குடி சாலை அவசர திருத்தம் : மாவட்ட நிர்வாகத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்து, கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதியுறுகின்றனர். இந்த நிலைமை குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், குறிப்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் காட்டப்படுகிறதா? என மனிதநேய ஜனநாயக கட்சி கேள்வி எழுப்புகிறது.

தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, முதலமைச்சர் பயணம் செய்ய உள்ள கோட்டார் முதல் மணக்குடி வரை உள்ள சாலைகள் மட்டும் அவசரகதியில் சீரமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், பழைய சாலைகளை முழுமையாக தோண்டாமல் அதன் மேல் புதிய தார் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு அதன் மீது சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏன் இந்த அவசரம்?
இந்த மாவட்டத்தில் வாழும் மக்கள் மனிதர்கள் அல்லவா?
முதலமைச்சர் வருகை புரியும் போது மட்டுமே சாலைப் பணிகள் நடைபெற வேண்டுமா?

இவ்வாறு செயல்படுவது, மாவட்டத்தில் வாழும் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கான சான்றாகும் என கட்சி குற்றம் சாட்டுகிறது.

தார் சாலை என்பது பொதுமக்கள் பாதுகாப்பாகவும், வாகனங்கள் பழுதடையாமல் செல்லவும் அத்தியாவசியமான வசதியாகும். ஆனால் தற்போது போடப்பட்டுள்ள சாலைகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பழைய சாலைகளை அகற்றாமல் மேல் மேல் பூச்சாக புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதாள சாக்கடைகளை முழுமையாக மூடி சாலை அமைப்பது எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது பொறுப்பற்ற நிர்வாகத்தை காட்டுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள், இந்த அலட்சியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது பழைய சாலைகளை முறையாக அகற்றி, நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாகக் கடைப்பிடித்து, தரமான புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *