கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியின் அலட்சியமும் மெத்தன போக்கும் காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் முஜீப் ரஹ்மான் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2ஆம் தேதி, குளச்சலில் உள்ள பிஸ்மி திருமண மண்டபத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் குப்பை சேகரிக்க சென்றது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த கபீர் என்பவர் மீது குப்பை வாகனம் பின்னால் அதிவேகமாக இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த கபீர், சில நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
சம்பவம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனத்தால் நிகழ்ந்தது என்பதற்கான சிசிடிவி (CCTV) வீடியோ ஆதாரம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுபோன்ற உறுதியான ஆதாரம் வெளியான பின்னரும், குளச்சல் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குப் பொறுப்பான குப்பை வாகன ஓட்டுநரை நகராட்சி நிர்வாகம் பாதுகாக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிர்வாகமே அலட்சியமாக நடந்துகொள்வது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் முஜீப் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று,
மரணமடைந்த கபீர் அவர்களின் குடும்பத்தாருக்கு ₹20 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
அலட்சியமாக செயல்பட்ட குப்பை வாகன ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சியின் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
என குளச்சல் நகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும், குறிப்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும் மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு என்பது அரசின் முதல் கடமை. அதில் தவறுகள் நிகழ்ந்தால், உடனடி நடவடிக்கை மற்றும் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் தமிழக விடியல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
