திருநெல்வேலி,ஜன.28:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இது தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று [ஜன.28] காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களின், திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திருநெல்வேலி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு, கலந்து கொண்டு, உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது.

“திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, ஒவ்வொருவரும் பயன்பெறும் வகையில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தல், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளுக்கான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உடனான சந்திப்பு, மீனவர்கள் உடனான சந்திப்பு, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனான சந்திப்பு, 40 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் [பிப்ரவரி] 6 மற்றும் 7 தேதிகளில், திருநெல்வேலிக்கு வருகை தருகிறார். அவ்வாறு வருகை தரும் அவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம், இனி என்றென்றும் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வண்ணம், நமது செயல்பாடுகள் அமைய வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதற்கு நாம் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும்! சீரிய நிர்வாகத்திறமையால், இந்தியாவுக்கே முன்மாதிரியாக நம் முதல்வர் நமது தமிழ்நாட்டை வழிநடத்துகிறார். இதனை, திமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும்!”- இவ்வாறு, அமைச்சர் கே.என்.நேரு, தம்முடைய உரையில், குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில், தமிழக முன்னாள் அமைச்சரும், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.பி.எம். மைதீன் கான், தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் தலைவரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், நெல்லை மாநகர திமுக செயலாளர் சு. சுப்பிரமணியன், திமுக அவை தலைவர்கள் வி.கே. முருகன், ம.கிரகாம்பெல், திமுக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.