உடுமலை : நவம்பர் 01,
தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு நிலப்பகுதிகள் பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வை செய்ய பாளையக்காரர்கள் அமைக்கப்பட்டனர். 18 ஆம் நூற்றாண்டு வரை பாளையக்காரர்களின் ஆட்சி இந்த மண்ணில் இருந்துள்ளது. பிற்பாடு அவர்கள் ஜமீன்தார்களாகவும், நிலக்கிழார்களாகவும் மாறிவிட்டனர்.
உடுமலையைச்சுற்றியுள்ள பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட பாளையங்கள் நிர்வாகத்தில் இருந்தன. உடுமலை வட்டம் பள்ளபாளையம் ஊரின் தெற்குப்பகுதியில் சிறிய சிவன் கோயில் உள்ளது. கோயிலுக்கு வெளியே சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் கற்சிலையில் கைகூப்பி நின்ற நிலையில் உள்ள தம்பதியினர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
அவர்களது ஆடை அணிகலன் மற்றும் சிகை அலங்காரத்தை வைத்துப் பார்க்குப்போது பாளையத்தை ஆட்சி செய்தவர்களாகத் தோன்றுகிறது. இச்சிலை இருக்கும் ஊரின் பெயரே பள்ளபாளையம். பள்ளபாளையத்திலிருந்து சில கல் தொலைவிலேயே தளி பாளையம் இருந்திருக்கிறது. இச்சிலை பள்ளபாளையத்தைச்சேர்ந்த பாளையக்காரர்களோ, அல்லது தளி எத்தலப்ப மன்னரின் பாளையத்தை சார்ந்தவர்களாகவோ இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சிற்ப அமைப்பை நோக்கும்போது குறைந்த பட்சம் 200 ஆண்டுகள் பழமையானதாகக்; கருதலாம்.
இது போன்ற சிதிலமடைந்த, தனிச்சிற்பங்களை பாதுகாக்க தமிழகத் தொல்லியல் துறை ஆவன செய்ய வேண்டும் என்று உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வேண்டுகை விடுக்கிறது. இதனை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருட்செல்வன், சிவகுமார் கள ஆய்வு செய்தனர்.
