அக்.19; கன்னியாகுமரி
பாலஸ்தீன் காசாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சியோனிச் இஸ்ரேல் நடத்திய கொடூரமான இனப்படுகொலை உலகளவில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிராக திருவிதாங்கோட்டில் பல்வேறு ஜமாஅத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து மாபெரும் மனிதநேய பேரணியை நடத்தினர்.

தீவிர விமர்சனத்துக்குரிய இந்த இன அழிப்பு போரில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் இடிந்து சீர்குலைந்துள்ளன. 1937 முதல் 2023 வரை 27-க்கும் மேற்பட்ட கூட்டுப்படுகொலைகளை நிகழ்த்திய இஸ்ரேல், அமெரிக்காவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் இதை முன்னெடுத்தது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த மனிதாபிமான பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி அருகே தொடங்கி நடுக்கடை சந்திப்பு வரை அமைதியாக நடைபெற்றது. பேரணியை திருவிதாங்கோடு இரு ஜமாஅத் பள்ளிவாசல்களின் தலைமை இமாம்களும் நிர்வாகிகளும் தொடங்கி வைத்தனர்.
பேரணி நிறைவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் “பாலஸ்தீனுக்கு சுதந்திரம் வேண்டும், இனப்படுகொலைக்கு முடிவு வேண்டும்” என்ற முழக்கங்கள் ஒலித்தன.
நடுக்கடை சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் SNOMMT ஜமாஅத் தலைவர் ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார். மௌலவி ஹம்ஸா ஸமதானி இறைவசனங்கள் ஓதினார். சோசியல் டெமோக்ராடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மௌலவி கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி சிறப்புரை ஆற்றினார்.
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அன்வர் ஹுசைன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை முன்னாள் செயலாளர் டாக்டர் முஹம்மது யூசுப் தொகுத்து வழங்கினார்.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக விடியல், கல்குளம் தாலுக்கா நிருபர்கள் பீர் முகமது மற்றும் அன்ஷாத் மாலிக்
