சங்கராபுரம், ஏப்ரல்-13
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம், கடைவீதியில் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அறிவுறுத்தலின்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப்பைக்கு மாற்றாக துணிப்பையை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை சார்பில் பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.வேல்முருகன் தலைமை தாங்கினார்.
அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் கோ.குசேலன், ரோட்டரி கிளப் செயலர் அரு.சங்கர், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மு.சக்கரவர்த்தி, அரிமா மாவட்டத் தலைவர் க.வேலு முன்னிலை வகித்தனர். மூரார்பாது பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.அ.ஸ்ரீராம் அவர்கள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் அவர்கள் கலந்துகொண்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பைகளை தவிர்க்கவேண்டும், மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் மற்றும் துணிப்பைகளை சங்கராபுரம் பகுதி பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் நா.சுதாகரன், வள்ளலார் மன்றச் செயலாளர் நா.இராதாகிருஷ்ணன், ஸ்டார் கிளப் நூர்தீன், ஓய்வுபெற்ற அலுவலர் சங்கச் செயலர் மதியழகன், வாசவி கிளப் தலைவர் பாலாஜி, தமிழ்படைப்பாளர் சங்க துணைச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் 500 பேருக்கு துணிப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக எலவனாசூர் பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சி.சாமிதுரை நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி